புதுச்சேரி குருமாம்பேட் ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழக்காததை கண்டித்து, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் காரணமாக சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று அக்கல்லூரியில் நடக்க இருந்த தேர்வும் போராட்டத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து அந்த ஊழியர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை சந்தித்து முறையிட்டனர்.
இந்நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கல்லூரி புல முதன்மையரிடம் பேசினார்.
அப்போது, கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணிஓய்வு பெற்றவர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை வழங்காமல் இருந்த காரணத்தால் அவர்கள் நீதிமன்றம் சென்று அதிகாரிகளுக்கு பிடிஆணை பெற்று வந்ததின் காரணமாக துறையில் இருந்து பணம் முழுவதையும் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்கியதாகவும், அதன் காரணமாக பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர், வேறு துறைகளில் இருப்பில் இருக்கும் பணத்தைக் கொண்டு இந்த ஊழியர்களுக்கு உடனடியாக குறைந்தது இரண்டு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பின்னர் நிதிநிலை சீரானதும் அந்த பணத்தை அந்த துறைக்கு கொடுக்க ஏற்பாடு செய்ய வேணுமாறு கேட்டுக்கொண்டார். முதல்வரும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதனால் ஒருவார காலமாக சம்பளம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்றோ அல்லது நாளையோ சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.