திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர்கள் களஆய்வு செய்யும் போது திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
இந்த மூன்று கல்வெட்டுகள் ஒரு கலவையான, அதே நேரம் சுவாரஸ்யமான பல செய்திகளை தருகின்றன.
தச்சம்பட்டு முருகன் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று ஒரு குறுநில தலைவனும் அவனது மனைவும் உள்ள சிற்பம் அதன் கீழ் 3 வரிக்கல்வெட்டு, அருகில் உள்ள பலகையில் மற்றொரு கல்வெட்டு, மணலூரிபேட்டை சாலையின் ஓரம் ஒரு ஆங்கில கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டுகளில் குறுநில தலைவன் என்று கருதப்படுகிற ஆண்பெண் உள்ள சிற்பம் கீழ் உள்ள கல்வெட்டில், மனலூர்ப்பேட்டையிலிருக்கும் கெங்கை கோத்திறம் என்று உள்ளது.
அருகில் உள்ள பலகைக்கல்வெட்டில் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் பெண்ஜாதி சூப்பச்சியம்மனுக்காக பச்சையம்மாள் மகனார் முனியகண்ணன் கொளமும் தற்ம சத்திரமும் கட்டியதாக குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் சுமார் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.
சாலையின் அருகில் உள்ள ஆங்கில கல்வெட்டையும் படியெடுத்த போது அதில், KNAPP REST HOUSE for Travellers & Animals in honour of Our popular Collector A.R. KNAPP Esqn ICS நாப்பு துரை விடுதி – என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ததில் நாப்பு துரை என்பவர் அப்போதைய தென்னார்காடு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் (1909-1910) அவர் இங்கிலாந்தில் உல்ஸ்டனில் 1870 இல் பிறந்தவர். மாவட்ட ஆட்சியர் உட்பட் பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து வருவாய் துறை (Board of Revenue) இல் செயலாளராக இருந்தார். மெட்ராஸ் எம்.எல்.சி யாக இருந்தவர். இறுதியாக 1954 இல் இறந்துபோனார். இவர் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வகுத்துள்ளார் போலும் அதனால்தான் அவரை இங்கு போற்றும் விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
நாப்பு துரை அவர்கள் இந்த கல்வெட்டில் திருவண்ணாமலையில் இருந்து மணலூர் பேட்டை வழியாக செல்லும் பயணிகளின் நலனுக்காக தங்குமிடத்தை கட்டியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க செய்தி வெறும் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அந்த தங்குமிடத்தில் இடமுண்டு. இது அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் தர்ம செயல்பாட்டை எடுத்தியம்புகிறது. இந்த மாவட்ட ஆட்சியரின் மற்றொரு தர்மசெயலும் அதன் தடயமும் திருவண்ணாமலையில் உள்ளது.
திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலக சுற்றுச் சுவரின் அருகில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கல் இருந்தது. அதில் இதே நாப்பு துரை குறித்த கல்வெட்டு வெட்டப்பட்டிருந்தது. அது, KNAPP PATH in honour of our popular collector A R KNAPP Esq ICS நாப்பு துரை பாதை 1909 –தாசில்தார்/சேர்மேன் தாஜுதீன் சாகிப், எ. ராஜன், LFO என்று உள்ளது. இந்த கல்வெட்டு இருந்த நாப்பு சாலை என்பது தற்போது திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையாக உள்ளது. அதற்கு நாப்பு சாலை என்று 1909 இல் பெயர் வழங்கப்பட்டதை அறியமுடிகிறது. தற்போது அந்த கல்வெட்டு இல்லை. பாலம் கட்டும்போது புதைத்து விட்டதாக அறியமுடிகிறது.
இந்த இரண்டு நாப்பு துரை கல்வெட்டிலும் in hounour of our popular collector என்பது மக்கள், ஊர்காரர்கள் வைத்த பெயராகலாம். அந்த அளவிற்கு அவர் மக்கள் நலனுக்காக செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது. அதன் வெளிப்பாடே இந்த கல்வெட்டுகள்.
தச்சம்பட்டில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டி, தர்ம சத்திரம் கட்டி மக்கள் பணி செய்தார் ஒரு ஊர் தலைவன், 100 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுக்கும் விலங்குகளுக்கும் தங்குமிடம் கட்டிக் கொடுத்துள்ளார் ஒரு வெள்ளக்கார கலெக்டர். இந்த கல்வெட்டுகள் இரண்டு அறச்செயலை குறிப்பிடுவதால் இது முக்கியமான கல்வெட்டு வரலாற்றில் பதிவுசெய்யப்படுகிறது.
களப்பணியின் போது கிராம நிர்வாக அலுவலர், பாலகிருஷ்ணன், கிராம உதவியாளர் ஆதிலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.