விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பட்டங்களை வழங்கினார்.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, காஞ்சிபுரம் மற்றும் ஆரணி) பட்டம் வழங்கும் விழாவில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தர் க.பொன்முடி, முதன்மை விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
பொறியியல் கல்லூரி முடித்து பட்டம் பெறுவது என்பது சுலபமான செயல் அல்ல. எனவே நல்ல முறையில் தங்கள் பொறியியல் படிப்பினை முடித்து பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. அந்த வகையில், முதன்முதலாக 2008-ஆம் ஆண்டு விழுப்புரத்தில் அண்ணா பல்லைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர், விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபொழுது திண்டிவனம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பகுதிகளிலும் உறுப்புக்கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், அண்ணா பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்திட வேண்டும் என்று ஆசைப்பட்ட மாணவர்களின் கனவினை நிறைவேற்றும் விதமாக அனைவரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படித்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மாவட்டந்தோறும் அண்ணா பல்ககைலக்கழக உறுப்புக்கல்லூரி கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் சேர்ந்து படிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், ஆட்சிப்பொறுப்பில் இருந்தபொழுதுதான் மாவட்டந்தோறும் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், வகுத்த வழியில் நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த பிள்ளைகளும் கண்டிப்பாக உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் உயர்கல்வி என்பது எட்டா கனியாக இருந்தது. குறிப்பாக பெண் பிள்ளைகளை உயர்கல்விக்கு பெரும்பாலும் பெற்றோர்கள் கல்லூரிக்கு அனுப்புவது இல்லை. ஆனால் தற்போது தமிழநாடு முதலமைச்சர், மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில், “நான் முதல்வன்” மற்றும் “புதுமைப் பெண்” போன்ற பல்வேறு திட்டங்களை கல்வித்துறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
தற்பொழுது, வறுமையின் காரணமாக உயர்கல்வி பயிலாத மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்திய வரலாற்று சிறப்புத் திட்டங்களால், ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் உயர்கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இத்தகைய நிலையினால் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை பெற்று விளங்குகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், பொறியியல் பாடங்களை மாணவர்கள் புரிந்து படித்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பொறியியல் பாடப்பிரிவுகளை தமிழ்வழியில் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் தமிழ்நாடு உயர்கல்வியில் 52 சதவீதம் பெற்று உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. கிராமங்களில் இடைநிற்றல் மாணவ, மாணவியர்களை உயர்கல்வியினை தொடர்ந்து படிக்க வைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மாவட்டந்தோறும் குழு ஒன்றினை ஏற்படுத்திட வேண்டும். இக்குழுவானது உயர்கல்வி படிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அம்மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.
பொறியியல் பாடப்பிரிவினை தேர்ந்துதெடுத்து படித்துள்ள மாணவ, மாணவியர்கள் அறிவியல் துறை சார்ந்த பிரிவில் கவனம் செலுத்திட வேண்டும். உதாரணமாக சந்திரனில் இந்தியாவின் பெயர் இடம்பெறுவதற்கு முழுமுதற் காரணமாக விளங்கியவரும் நம் மாவட்டத்தினைச் சேர்ந்தவரும் இஸ்ரோவின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் என்பவர் மிக முக்கிய காரணமாகும்.
அந்த வகையில் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திடும் வகையில் தங்களுடை எதிர்கால செயல்பாடுகள் அமைத்துக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர்சிவா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் உட்பட பர் கலந்து கொண்டனர்.