தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் ரூ.4.04 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனை 25 பயனாளிகளுக்கு ஒப்பளிப்பிற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.4.04 மதிப்பீட்டிலான தொழிற்கடன் ஒப்பளிப்பிற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை வகுத்து சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வினை களைந்திடும் வகையில் செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் நடைமுறைபடுத்தி வருகிறது. சிறு. குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மூலமாக பல்வேறு சுய தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நமது மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளதால் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் நடைபெறுகிறது. கடந்த ஒன்றரை மாத காலங்களில் 131 நபர்களுக்கு சுமார் ரூ.8.74 கோடி மதிப்பீட்டிலான மானியத்துடன்கூடிய கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இக்கடன் வசதியாக்கல் முகாம் மூலம் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் சிறப்புகளைப் பற்றியும், இதுபோன்ற அரசின் திட்டங்களை அறிந்து தொழில் துவங்கி தங்களது பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள முன்வரவேண்டும்.
மேலும், கடன் வசதியாக்கல் முகாம் பற்றிய விரிவான தகவலை மாவட்ட தொழில் மையம் மூலமாக அறிந்துகொண்டு இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சுயவேலை வாய்ப்புத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு வங்கிகள் உதவிக்கரம் நீட்டி நமது மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றம் அடைந்திட வழிவகை செய்யுமாறு வங்கியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இத்திட்டத்தினை பற்றிய விரிவான தகவல்களை அனைவரும் தங்களுக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து நமது மாவட்டத்தை தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரா.விஜயகுமார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.அசோக்ராஜா, மாவட்ட தாட்கோ மேலாளர் லோகநாதன், தொழில்முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.