ஆரணி நகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், மருசூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக மருசூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரணி-சேத்பட் சாலை அருகே 3க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நீர் தேக்க தொட்டியில் சேகரித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆரணி நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பகுதிக்கு கொண்டு செல்லாமல், மருசூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கொட்டி தீயிட்டு எரித்து வந்த நிலையில் ஆரணி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று மீண்டும் குப்பைகளை லாரியில் கொண்டு சென்று கொட்டி ஏரிக்க முயன்றுள்ளனர். அதனால் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து, அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துப்புரவு பணியார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ் பொதுமக்களிடம் சமர பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.