மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்
மக்களுடன் முதல்வர்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் பேரூராட்சியில் “மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்கள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் உடனிருந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் முகாமினை பார்வையிட்டு பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தேசூர் பேரூராட்சியில் நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் எந்த வார்டுகளுக்கு முகாம் நடைபெறுகிறதோ அந்த வார்டு பொதுமக்கள் மனு வழங்கலாம். வார்டு பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மனு வழங்கலாம். மற்ற வார்டு பொதுமக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் மனுக்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
“மக்களுடன் முதல்வர்” முகாமில் இ-சேவையில் பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு ரூ.30 செலுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம். முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மக்களுக்கான பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்படுகிறதா என நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இன்று நடைபெற்ற முகாமில் பட்டா மாறுதல் கேட்டு மனு அளித்த 4 நபர்களின் மனு மீது உடனடி தீர்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான ஆணை மற்றும் 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி (பொ), தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், தேசூர் பேரூராட்சி தலைவர் இராதா ஜெகவீரபாண்டியன், பேரூராட்சி செயல் அலுவலர் இராதாகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.