சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் ஆசை வைத்துக் கொள்ளக் கூடாது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை கூறினார்.
புதுச்சேரி காவல்துறையில் புதியதாக காவலர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா கோரிமேடு காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு காவலர்களுக்கு பணி ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில்
புதுச்சேரி கடற்கரை அழகாக இருக்கும். இதில் குளிக்கும் ஆசை சுற்றுலா பயணிகளுக்கு வரக்கூடாது. அவர்கள் கடலில் இறங்காமல் பார்த்து கொள்ள வேண்டியது காவல் துறையின் கடமை. காவல் துறையில் 36 கடல் பாதுகாவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
விழாவில் பேசிய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசியதாவது
பழைய காவலர் குடியிருப்பில் மிகச் சிறிய அளவில் இருப்பதால் பலரும் காலி செய்து சென்று விட்டனர். இதனை சமூக விரோதிகள் தற்போது ஆக்கிரமித்துள்ளனர். இதனை முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் கவனத்தில் கொண்டு 3 அறைகளாக கொண்ட குடியிருப்பாக மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.