சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தட பஸ் சேவையை எஸ். சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கிராம மக்கள் மலர் தூவி பேருந்தை வரவேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், பள்ளிப்பட்டு சுற்று வட்டார கிராம மக்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
சென்னைக்கு சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், பள்ளிப்பட்டு அருகே திருமல்ராஜபேட்டையிலிருந்து பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, புச்சிரெட்டிப்பள்ளி, திருத்தணி மார்கத்தில் சென்னைக்கு புதிய பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் தேவன் தலைமை வகித்தார். பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் வரவேற்றார். இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று புதிய வழித்தட பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிராம மக்களின் கோரிக்கைடை ஏற்று சென்னைக்கு புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டதால், மகிழ்ச்சி அடைந்த கிராமமக்கள் பேருந்து மீது மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.
பள்ளிப்பட்டு முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.ரவீந்திரநாத், ஒன்றிய கவுன்சிலர் சேகர், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை லோகநாதன், கோபி, சுகுணா நாகவேலு, பள்ளிப்பட்டு பேரூர் கவுன்சிலர்கள் சி.ஜெ.செந்தில்குமார், விஜயிலு, கபிலா சிரஞ்சிவி, குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.