எழிலரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் ஒன்றிய பகுதிகள் வழியாக பூந்தமல்லிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் பஸ் வசதி மிகக் குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து, பெருநகரங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ் வசதியினை ஏற்படுத்தினார்.
இந்த புதிய வழித்தடத்தில் பஸ் வசதி தொடக்க விழா தாமல் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி முன்னிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் புதிய வழித்தட பஸ் வசதியை தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்டார்.
முசரவாக்கம், மேல்ஓட்டிவாக்கம், கீழம்பி உள்ளிட்ட பகுதிகள் வழியாக புதிய பஸ் வருவதை கண்ட பொதுமக்கள், பேண்ட் வாத்தியங்களுடன் வரவேற்று பெண்கள் அதிக அளவில் ஆர்வமுடன் ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் உடைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
புதிய பேருந்து வரவேற்க காத்திருந்த பெண்களிடம், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. புதிய வழித்தடத்தில் பேருந்து பயணிக்கும் பகுதிகள் குறித்து விளக்கினார்.
இந்த பஸ், பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரங்களிலும், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கும் ஏதுவாக அமையும் வண்ணம் குறித்த நேரத்தில் பயணிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.ஏம்.குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், அயலாக அணி தலைவர் பி.ஏம்.நீலகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.