வேலூர் மாவட்டத்தில் நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் நடைபெறும்.
விழா நடத்துவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வழியாக அனுமதி பெறுவார்கள். அதன்படி, இந்தாண்டுக்கான எருதுவிடும் விழாக்கள் நடத்துவதற்கு https://www.jallikattu.tn.gov. in/ என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இதையடுத்து, அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக எருது விடும் விழா நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
எருதுவிடும் விழாவுக்கு விண்ணப்பிப்பது குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
எருதுவிடும் விழாவுக்கு எவ்வாறு இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், அதற்காக இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கு மேற்பட்ட விழா குழுவினர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ”வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழக அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடங்களில் எருது விடும் விழா நடத்துவதற்கு அரசு ஆணை வெளியிடப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 80 கிராமங்களில் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. சில இடங்களில் தடுப்பு வேலிகள் மட்டும் முறையாக கட்டப்படாமல் இருந்தது கண்டறியப்பட் டது.
இந்தாண்டு அத்தகைய குறைகள் இருந்தால் எருதுவிடும் விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாது என ஆட்சியர் எச்சரித்துள்ளார். எனவே, நெறிமுறைகளை முறையாக பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே எருதுவிடும் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும்” என்றனர்.