விஜயகாந்துக்கு அயலான் படக்குழு மரியாதை சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் அயலான் முதல் காட்சி என்றாலும், மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அயலான் டைட்டில் கார்டில் கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழு இறுதி மரியாதை செய்துள்ளது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி உயிரிழந்தார்.
மறைவுக்கு சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதுவும் அவர் சென்னையில் இருந்துகொண்டே விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த 6ம் தேதி கேப்டன் விஜயகாந்த் இல்லத்துக்கு தனது மனைவி ஆர்த்தியுடன் சென்றார் சிவகார்த்திகேயன். கேப்டன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேப்டனின் மகன்களை சந்தித்தும் அவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், இப்போது அயலான் படத்தின் டைட்டில் கார்டிலும் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். என்றென்றும் நினைவில் கேஜேஆர் & ஃபேமிலி, சிவகார்த்திகேயன் & ஃபேமிலி, அயலான் டீம் என டைட்டில் கார்டில் விஜயகாந்த் போட்டோவுடன் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ரசிகர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.