திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கணப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவில் இருந்து அருணாசலேவரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் மருவத்தூர் பக்தர்களும் கோயிலுக்கு அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சராசரியாக பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. கோயிலில் வழக்கமாக சாமி மற்றும் அம்மன் சன்னதியில் அமர்வு தரிசனம் என்ற முறை உள்ளது. கோயிலில் அமர்வு தரிசனம் மேற்கொள்ளப்படுவதால் வரிசையில் வரும் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
சில சமயங்களில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்புகளும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமர்வு தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பக்தர்கள் பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் திடீர் அதிரடி நடவடிக்கையாக நேற்று மாலை முதல் அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசன முறையை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது
இது குறித்து கோயில் இணை ஆணையர் ஜோதி கூறுகையில், கோவிலில் அதிக அளவில் வரும் பக்தர்களின் நலன் கருதியும், விரைவு தரிசனத்திற்கு வழி வகுக்கும் வகையிலும் அமர்வு தரிசன முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்றார்.