காட்பாடியை அடுத்த தமிழக -ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான கிருஸ்டியான் பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.
கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து சோதனை சாவடி ஆந்திரா, கர்நாடகா செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
இச்சொதனை சாவடியை கடக்கும் சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் மற்றும் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான குழுவினர் இந்த திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி பணியில் இருந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் பதிவு அறை மற்றும் கணினி அறையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 900 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.