இந்தியாவின் அதிவிரைவு ரயில் சேவைகளில் ஒன்றாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மாறியிருக்கிறது. இது முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. தானியங்கி கதவுகள், வைஃபை இணைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள் என நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் டிக்கெட் கட்டணம் அதிகம். குறைந்தது 1,000 ரூபாய் என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக மாறியிருக்கிறது.
இந்த குறையை போக்கும் வகையில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என்ற சேவையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏசி வசதிகள் இல்லை. மற்றபடி நவீன வசதிகளும், அதிவிரைவு பயணத்திற்கும் பஞ்சமில்லை. LHB எனப்படும் லிங்கே ஹாஃப்மன் புஸ்ச் என்ற பாதுகாப்பு அம்சமும், ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கிளாஸ், சீட்டிங் உடனான லக்கேஜ்கள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள், சிசிடிவி, ஒளிரும் பட்டைகள், தண்ணீர் பயன்பாட்டை அளவிடும் மானிட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இது புஷ் புல் முறையில் இயக்கப்படுவதால் குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை எட்டிவிடுகிறது. எனவே ஆற்றல் பெரிதும் மிச்சமாகிறது. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்க முடியும். எவ்வளவு தூரம் பயணித்தாலும் அசதி ஏற்படாத வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் உடன் குறைந்த டிக்கெட் கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது தர்பங்கா – ஆனந்த் விகார், தர்பங்கா – மால்டா டவுன் என இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இதில் தர்பங்கா – மால்டா ரயில் தமிழகத்தின் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்கிறது. இந்நிலையில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை விடுவதற்கு புதிய வழித்தடங்களை இந்திய ரயில்வே ஆய்வு செய்து வந்தது. அதன்படி, 26 அம்ரித் பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து புறப்படும் வகையில் இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அவை, தாம்பரம் மற்றும் நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும். இவை நேரடியாக வட மாநிலங்கள் உடன் அதிவிரைவு பயண சேவையுடன் இணைக்கப்படவுள்ளது. இதனை எதிர்பார்த்து தமிழக ரயில் பயணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.