தேர்தல், கூட்டணி குறித்து விவாதிக்க முடிவு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நாளை மறுதினம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது. இதில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 26 ஆம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை, மாநகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. இதில் பங்கேற்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் 2019 ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் 39 இடங்கள் தோல்வி அடைந்தது ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த 2 தேர்தலையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்தது. பின்னர், கட்சியில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். தற்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி முழுவதுமாக வந்துள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2 தேர்தல்களிலம் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
2026 தேர்தலில் எடப்பாடி பழனி சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மறுத்துவிட்டார். மேலும், மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவர் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் விரக்தியும், கோபமும் அடைந்த அதிமுக முன்னணி தலைவர்கள் கூடி விவாதித்து, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட்டுள்ளது. இந்த தேர்தலில் தனித்து களம் காண அதிமுக திட்டமிட்டுள்ளது. அதே நேரம் பாஜகவுடன் தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு பாஜக மேலிடம் மறைமுக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கூட்டணி இல்லை என்றால் அதிமுக தலைவர்கள் மீதான வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் நாளை மறுதினம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுறது.