வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், திமுக மாமன்ற உறுப்பினரும் ஒன்றாவது மண்டல குழு தலைவருமான புஷ்பலதா வன்னியராஜா பேசுகையில் ஒன்றாவது மண்டலத்திற்குட்பட்ட தெருக்களில் விளக்குகள் எரிவதில்லை.
ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் சரியாக பதில் அளிப்பதும் கிடையாது. மக்கள் இதனால் எங்களை பல கேள்விகள் கேட்கின்றனர் என பேசினார்.
இதைத்தொடர்ந்து மேயர் சுஜாதா நீங்கள் அடிக்கடி மாநகராட்சி பணிகள் சரியாக நடக்கவில்லை என அரசை குறை கூறுகிறீர்கள், ஏற்கனவே பதவியை ராஜானாமா செய்கிறேன் என சொன்னீர்கள் இப்போது அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள் என்றார்.
பதிலுக்கு வாக்குவாதம் செய்த புஷ்பலதா, மக்கள் என்னை கேள்வி கேட்கிறார்கள் என்று சொன்னால் நீங்கள் ஏன் சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள் என கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காட்பாடியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ரமேஷ் பேசுகையில், எனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. நானே எனது சொந்த செலவில் மக்கள் பணிகளில் ஈடுபடுகிறேன் என குற்றம்சாட்டி பேசிகொண்டிருக்கும் போதே வேகமாக தீர்மானங்கள் படிக்கப்பட்டு கூட்டம் முடிக்க தீவிரம் காட்டினார்கள்.
கடுப்பான திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் ரமேஷிடம் மைக்கை பிடுங்கியதால் திமுக அதிமுகவிடையே மோதல் ஏற்பட்டு வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் 7 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாமக கவுன்சிலர் பாபி கதிரவனும் தனது வார்டில் எந்த பணிகளும் செய்யபடுவதில்லை பேசவும் வாய்ப்பு தரவில்லை என ஆவேசமாக பேசினார்.இவ்வளவு களேபரங்களுக்கு இடையே மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் சமத்துவ பொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர்களை தவிர்த்து மற்ற அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.