திருவண்ணாமலை எஸ்பி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கன்ராயன், போலீசார் தனசேகர் பாபு, தமிழ்செல்வன் ஆகியோர் நேற்று ஆரணி, செய்யாறு ரோடு, எஸ்.வி.நகரத்தில் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கினர்.
கார் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் ஓவர் ஸ்பீடாக சென்றார். இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அந்த காரை 1 கி.மீ. துாரம் சினிமா பாணியில் துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர். பின்பு காரை சோதனை செய்தபோது. அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் பராக், கூலிப் உட்பட போதை பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த 2 பேரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.இதில் அந்த நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கைலாஷ் (24).
முக்கேஷ் (25) என்பது தெரிய வந்தது. மேலும் காரில் இருந்த 19 மூட்டையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள், ரொக்கம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மதிப்பு ரூ.16 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கைலாஷ், முகேஷ் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டிஎஸ்பி ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆரணி சப்டிவிசனில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனையை தடை செய்ய எனது தலைமையில் 5 தனிப்படை அமைக்கப் பட்டு கண்காணிக்கப்படுகிறது என்றார்.