50 பேர் உயிர் தப்பினர்
உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் அருகில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் உட்பட 50 பேர் உயிர் தப்பினர்.
புதுச்சேரியின் நகரத்தின் மேட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் வெளியேறும் வழியாக இருப்பது உப்பனாறு வாய்க்கால். பல ஆண்டுகளாக இதை சீரமைக்காமல் உள்ளனர்.
வாய்க்காலில் மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலின் கரையை பலப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வாய்க்காலின் மண் அள்ளும் பணியில் பொக்லைன் எந்திரம் பணி நடைபெற்றது.
வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டு சாயும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அப்பகுதி மக்கள் கூடி வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ஒதியன் சாலை போலீசாரும் அங்கு வந்தனர். வாய்க்காலுக்கு அதிகப்படியான மணல் தோண்டுவதால் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து சரிந்து விழுந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத அதன் அருகே நின்றிருந்த பொதுமக்கள்,
போலீசார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் மற்றும் பொதுமக்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வேகமாக ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆட்டுப்பட்டில் ரங்கநாதன் – சாவித்திரி தம்பதியினர் கட்டி உள்ள 3 மாடி கட்டடத்திற்கு வருகின்ற 11 தேதி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில், அந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
பொதுப்பணிதுறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ஒப்பந்ததாரர் வாய்க்காலில் அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக குற்றச்சாட்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து வீடு இடிந்தது பற்றி நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து உரிமையாளருக்கு உரிய இழப்பீடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில செயலாளர் அன்பழகன் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.