கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை
ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் அஷ்பக் அஹமத் இவருக்கு பார்சனாப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கியாபல்லி பகுதியில் உள்ள 6 ஏக்கர் பண்ணை நிலத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.இதனை அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பன்னை நிலத்தில் வேலை செய்து கறவை மாடுகளையும் பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம்போல் பன்னை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கறவை மாடுகளுக்கு தீவனம் கொடுத்த சில நிமிடங்களில் 8 மாடுகள் திடீரென மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு மாடுகள் காப்பாற்றப்பட்ட நிலையில் 6 கறவை மாடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார் மற்றும் அங்கு பணி புரிந்தவர்கள் உடனடியாக நிலத்தின் உரிமையாளர் அஷ்பக் அஹமத் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை பராமரிப்பு துறை மாவட்ட உதவி இயக்குனர் முரளி மற்றும் கால்நடை மருத்துவர் சங்கீதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கால்நடைகளை உடற்கூறாய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.