திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை நகரம் சன்னதி தெருவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு முடிவுற்ற நிலையில் விநாயகர் கோயில் அருகே யாக சாலைகள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதற்காலம் மற்றும் 2 கால யாக பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை கோபூஜை மற்றும் 3 கால யாக பூஜை நடந்தது.
பூர்ணாஹுதி நடைபெற்ற யாக சாலையில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு வல்லப விநாயகர் கோயில் மேல் உள்ள கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு சுவாமி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.