கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகம் கட்டிடம் மற்றும் அறிவுசார் மையத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி, செய்யார் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 75 இலட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் மற்றும் அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக திறந்ததையொட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் மாநில தடகளச் சங்க துணைதலைவர் எ.வ.வே.கம்பன், கலசபாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் உடனிருந்தனர்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை நகராட்சி திருக்கோயிலூர் சாலையில் ரூ.1 கோடியே 99 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் இன்று 05.01.2024 காணொலி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.
நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தில் நுழைவு தேர்வு, போட்டித் தேர்வுகள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 2480 புத்தகங்கள், இணைய வழி கல்வி முறை மற்றும் நவீன டிஜிட்டல் வகுப்பு அறை (Smart class) வசதி செய்யப்பட்டுள்ளது.
அடித்தளம் மற்றும் முதல் தளத்தில் சுமார் 100 நபர்கள் அமர்ந்து படிக்க இருக்கை வசதி உள்ளது. கட்டடத்தின் பரப்பளவு 4 ஆயிரத்து 670 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா நகரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் 3 ஆயிரத்து 810 சதுர பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரத்து 969 புத்தகங்கள், 5 கணினிகள் கொண்டு இணைய வழி கல்வி பயிலவும் வசதி செய்யப்பட்டுள்ளது. செய்யார் நகராட்சியில் வார்டு எண்1, அண்ணா நகர் பூங்காவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 70 மாணவர்கள் ஒரே இடத்தில் நூலகத்தின் தரை தளத்தில் அமர்ந்து படிக்க இருக்கை வசதி, முதல் தளத்தில வட்ட மேஜை அறை வசதியும், 10 கணினிகள் கொண்டு இணைய வழி கல்வி பயிலவும், மேலும் 30 குழந்தைகள் அமர்ந்து படிக்க தனியறையும் அமைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு முழுவதும் புதிய கட்டடங்கள், புதிய குடிநீர் தேக்க தொட்டிகள் திட்டங்கள், பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் இந்த அறிவு சார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய நிலையில் இருப்பதற்கு டாக்டர் கலைஞர் அவர்களால் 1 கிலோமீட்டர் தொலைவில் ஆரம்பகல்வியும், 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளியும், 5 கிலோமீட்டர் தொலைவில் உயர்நிலைப் பள்ளியும், 10 கிலோமீட்டர் தொலைவில் மேல்நிலைப் பள்ளியும் தொடங்கி வைத்ததன் காரணமாக, மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று, இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
எதிர்காலத்தில் கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்த்து அறிவு திறனை வளர்த்து கொள்ள புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தினை வளர்த்துகொண்டு, இந்த நுலகத்தை நல்ல முறையில் பேணி காக்கவேண்டும் என சட்டப்பேரவை துணைதலைவர் அவர்கள் பேசினார்.
திருவண்ணாமலை நகர மன்ற தலைவர். நிர்மலா கார்த்திக் வேல்மாறன், திருவண்ணாமலை நகர மன்ற துணைதலைவர். ராஜாங்கம், நகராட்சி ஆணையர். தட்சணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர். சரவணன், துணைதலைவர். தமிழரசி, பேரூராட்சி செயல் அலுவலர். இராதாகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.