ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 228 மி.மீ. மழை பதிவானது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான அளவில் மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி மேற்கு சீரப்பாளையம் குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதனால் விளைநிலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. திங்கள்கிழமை மிதமான அளவில் மழை பெய்தது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சித்தமல்லி, அகரபுத்தூர், பழஞ்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிலா விதைக்கப்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கின.
கடலூர் மாவட்ட மீன் வளம் மீனவர் நலத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 6 ஆம் தேதி முதல் 3 நாள்களாக கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்பிடி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.