தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வானாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, பல்வேறு அரசு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. வானாபுரம் ஊராட்சியில் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் கட்டிடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சிமெண்ட் சாலை, பள்ளி சத்துணவு கூடம், ஊராட்சி மன்ற கட்டிடம் என பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, வானாபுரம் ஊராட்சி, குங்கில்நத்தம் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைத்தல் பணி 45 × 40 பரப்பளவில் 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணி நடைபெற்று வருகிறதை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திட்டங்கள் செயல்படுத்தும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி), ஊராட்சி மன்ற தலைவர், துறை அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.