தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த செய்திகளுக்கு நடுவில் கொடூரமான ஒரு செய்தி வெளியாகி தீபாவளி கொண்டாட்டங்களை மறக்கடிக்க செய்தி இருக்கிறது அந்தச் செய்தி நம் தலைநகர் சென்னையில் வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமி தான் பணியாற்றி வந்த குடும்பத்தாரால் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூரை சேர்ந்த அந்த சிறுமி தனது தந்தை மரணம் அடைந்ததை தொடர்ந்து தனது ஏழைத்தாய்க்கும் பால்மணம் மாறாத தன் தம்பிக்காகவும் சொந்த ஊர் உறவுகளை விட்டு தலைநகரில் வீட்டு வேலைக்கு வந்துள்ளார் அந்த சிறுமி. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அந்த வீட்டில் ஆரம்பம் முதலே பல கொடுமைகளை சந்தித்து வந்துள்ளார் சிறுமி என்கிறது காவல்துறை விசாரணை. அதோடு சிறுமியின் முதலாளி குடும்பத்தின் நண்பர் குடும்பமும் சிறுமியை அயன் பாக்ஸில் சுடுவது, சிகரெட்டால் சுடுவது என தினம் தினம் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் அந்த அப்பாவி சிறுமி.
சிறுமியின் உடல்களில் உள்ள காயங்களை பார்த்தால் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக தீபாவளி தினத்தில் கூட அந்த சிறுமியை சொந்த ஊருக்கு அனுப்பாமல் கொடுமை படுத்திய அந்த கொடூர குடும்பத்தினர் தீபாவளி அன்று சிறுமியை அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் சிறுமியின் உடலை வெளியே கொண்டு போய் போட வேண்டும் என பெரும் முயற்சி செய்து அது முடியாமல் போகவே சிறுமியின் உடலை குளியலறையில் போட்டு குளிக்கப் போனவள் மர்மமாக இறந்து விட்டார் என்று நாடகமாடியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் தான் கொடூர கொலை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக அந்த சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வசதி இல்லாமல் இங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வடித்திருக்கிறார். அதன் பிறகு அந்த சிறுமியை சென்னையிலேயே அடக்கம் செய்திருக்கிறது போலீஸ்.
இந்த விவகாரம் தலைநகரை உலுக்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்கள் தலைநகரில் வீட்டு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் பணிபுரியும் வீடுகளிலே தங்க வைக்கப்படுகின்றனர். இதில் வசதி படைத்த வீடுகளில் பணி புரியும் பெண்களுக்கு ஏற்படும் கொடூரங்கள் வெளியில் வருவதில்லை என்கின்றனர். பல பெண்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்து வரும் சம்பவங்களும் பெருகி வருவதாக கூறப்படுகிறது. பல சிறுமிகளின் எதிர்காலம் வசதி படைத்தவர்களின் இல்லத்திலன் சமையலறையிலேயே முடக்கிப் போய்விட்டது.
ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதார பிரச்சனையையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அரசு தனிக்கவனம் செலுத்தி வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களை கண்காணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.