நடிகர் விஜய் புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற உள்ளது. விஜய் மாநாட்டு தேதி அறிவித்ததில் இருந்தே அவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக துவங்கப்பட்ட மாநாட்டு பணிகள் இறுதிக் கட்டத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.
தமிழகத்தில் இதுவரை துவங்கப்பட்ட அரசியல் கட்சிகளை தமிழக மக்களும் நம்பி பயணிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பாலான கட்சிகள் துவங்கப்பட்ட நாளில் இருந்த கொள்கை பிடிப்பு நாளாக, நாளாக தங்கள் சுயநலத்திற்காக கொள்கைகளில் இருந்து விலகி பயணிக்கத் தொடங்கி விட்டனர் இன்னும் பலர் கூட்டணிக்காகவும் பதவி சுகத்திற்காகவும் கட்சியின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு தேர்தல் கூட்டணி என்ற பெயரில் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தார்களோ அவர்களோடவே கூட்டணி வைப்பதும் யாரை விமர்சித்து அரசியல் செய்தார்களோ அவர்களோடு தேர்தலுக்காக கூட்டணி வைப்பதும் தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிட்டது.
மறுபுறம் விஜயை போலவே மக்கள் நலனை முன்னிறுத்தி மாற்றத்தை கொண்டு வருவேன் என தேமுதிகவை துவங்கிய விஜயகாந்த் கடைசியில் அக்கட்சியினரின் துரோக வலையில் சிக்கி அரசியலில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அதேபோல சாதிய பின்னணியில் கட்சியை துவங்கிய தலைவர்கள் கடைசியில் தேர்தலுக்காக தங்கள் கொள்கையை பின்னுக்கு வைத்து விட்டு தேர்தல் கூட்டணிக்காக தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டனர் இப்படி பல்வேறு உதாரணங்களை தமிழக அரசியல் வரலாற்றில் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆக மொத்தம் தமிழ்நாட்டு மக்கள் நம்பிய அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒரு கட்டத்திற்கு மேல் தங்கள் நிலைப்பாட்டை சுயநலப் போக்குடன் மாற்றிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த சூழ்நிலையில்தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டிருக்கிறது அரசியல் அரங்கில் விஜய் கட்சி துவங்கியதும் இளைஞர்களின் வாக்குகள் வளர்ந்த கட்சிகளிடமிருந்து பிரியும் என்ற ஒரு தகவல் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே வேலையில் பெண்கள் உட்பட வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாநாட்டில் பங்கு பெறுவார்கள் என்பது விஜய் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக இருக்கிறது. திரையில் தான் தோன்றிய போதெல்லாம் விசில் அடித்து கைத்தட்டி ஆரவாரம் செய்து விஜயை வளர்த்து விட்ட அந்த ரசிக கண்மணிகளை விஜய் சரியாக பயன்படுத்தி தனது அரசியல் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அதேபோல மற்ற அரசியல் கட்சிகளை போல சூழ்நிலைக்கு ஏற்றார் போல் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் எடுத்தக்கொள்கையில் உறுதியுடன் பயணித்து தமிழக மக்களுக்கு நல்லதொரு வளர்ச்சி பாதையை காட்ட வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் விஜயின் கொள்கைகளையும் அவரின் கொள்கை பிடிப்பையும்.