உலக அரசியல் வரலாற்றில் சபை நாகரிகம் என்பதற்கு உதாரணமாக சொல்லப்படுவது தமிழர் அரசியலும், தமிழ்நாட்டு மேடைப் பேச்சுகளும் தான். ஆனால் இன்றைக்கு அவை அனைத்தும் தலைகீழாக மாறி சபை நாகரீகம் என்பதை அரசியல் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் காற்றில் பறக்க விட்டு தங்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் மேடையில் பேசி வருவது சபை நாகரிகத்துக்கு உரித்தானது அல்ல.
உதாரணமாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பது பற்றி விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான் விஜயின் கொள்கை நிலைப்பாட்டை பற்றி விமர்சிக்கும் பொழுது ரெண்டுத்துக்கும் நடுவுல நிக்காத ராசா லாரி அடிச்சிட்டு போயிடும் என ஒரு அரசியல் கட்சி தலைவரை பொது மேடையில் விமர்சித்து இருப்பது கண்டனத்திற்குரியது.
நாம் தமிழர் கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இளைஞர்களே அதேபோல விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இருக்கும் பெரும்பாலானோர் இளைஞர்களே ஆக தமிழகத்தின் கணிசமான இளைஞர்களின் மனதில் ஆரோக்கியமான அரசியலை விதைப்பதை விட்டுவிட்டு அவர்களுக்குள் விரோத போக்கை கடைபிடிக்கும் அளவிற்கு தலைவர்கள் விமர்சித்துக் கொள்வது தமிழக அரசியலுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் நல்லதல்ல என்பதை நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வந்த தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் போனது ஏனோ தெரியவில்லை.
அதேபோல பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாக்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை புரிய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்றும் அவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லும் போது அதற்கு முன்பு வந்த பிராமணர்களை தமிழர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது என்று ஒரு விஷ விதையை தனது உரையில் விதைத்திருக்கிறார். மேலும் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கவே நான் பேசிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அரசியலில் என்ன சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்றைக்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை வக்கிரகமாக பேசியதை தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறேன் என அவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளிப்பதும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் மாநிலத்தின் ஒற்றுமை போக்குக்கு உகந்ததல்ல என்பதை கஸ்தூரி போன்றவர்கள் உணராமல் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது.
அதே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஒய்.ஜி.மதுவந்தி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரராக வரும் முகுந்த் வரதராஜன் கேரக்டர் ஒரு சிறந்த ராணுவ வீரர் என்பதை படத்தில் அழகாக சித்தரித்து உள்ள நிலையில் அதைப் பற்றி பேசிய மதுவந்தி ஏன் அந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் ஒரு பிராமணர் என்பதை குறிப்பிடவில்லை அப்படி குறிப்பிடுவதில் உங்களுக்கு என்ன பயம் என ஒரு கேள்வியை அந்த மேடையில் எழுப்பி இருக்கிறார்.
முகுந்த் வரதராஜன் மட்டுமல்ல அனைத்து மதத்தில் இருந்தும், சாதியில் இருந்தும் ராணுவத்திற்கு செல்லும் நம் வீரர்கள் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு தான் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றி வருக்கிறார்கள் என்பதை மதுவந்திப் போன்றவர்கள் கேள்விக்குறியாக்குவதும் கண்டனத்திற்குரியது இனிவரும் காலங்களிலாவது மேடைகளில் பேசும் பொழுது சபை நாகரீகத்தோடு வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.