விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறது அதே அளவிற்கு விஞ்ஞான ரீதியான குற்றங்களும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனித குலத்தை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது என்றே சொல்லலாம். அதில் மனிதர்களின் அன்றாட பணிகளை குறைத்தும், எளிமையாக்கியும் வருகிறது என்பதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத பரிதாப நிலையில்தான் நிற்கிறோம். ஏனென்றால் மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட விஞ்ஞானம் பல நேரங்களில் மனிதன் ஏமாறவும், அடுத்தவரை ஏமாற்றவும் என தினம் தினம் சூழ்நிலைகள் மாற்றிக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் நாடு முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த 4 1/2 லட்சம் வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்கிறது மத்திய அரசு. மோசடி, ஆவணங்கள் திருட்டு, கம்ப்யூட்டர் முடக்கம், ஆபாச படங்கள், என ஆன்லைன் மூலம் நடைபெறும் விஞ்ஞான குற்றங்கள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற சைபர் கிரைம்கள் எல்லாமே அடுத்தவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது தான் முக்கிய நோக்கமாகவும் கருவாகவும் இருக்கிறது.
சராசரியாக ஒரு ஆண்டிற்கு ஆன்லைன் மூலம் 17 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து வருவதாக சொல்லி இருக்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தப் புள்ளிவிவரம் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டவை. பதிவு செய்யப்படாத சைபர் குற்ற செயல்கள் பல ரகங்களில் பல ஆயிரம் கோடிகளில் திரை மறைவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள். அந்த வகையில் சைபர் குற்றங்கள் எல்லை மீறி சென்ற பிறகுதான் அதிகாரிகள் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சருக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி விவாதம் நடைபெற்ற பின்னரே ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த 4 1/2 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி இருக்கிறது மத்திய அரசு.
சரி 4 1/2 லட்சம் வங்கிக் கணக்கில் பின்னால் மிகப் பெரிய அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையுமே போலியான ஆவணங்களால் துவக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமலா போலி ஆவனும் கொண்டு கணக்குகள் துவங்கியிருக்க முடியும்? குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்தியாவின் அரசு ஊழியர்கள் தொடங்கி அரசு நலத்திட்டங்களை வங்கி மூலம் பெறும் விவசாயிகள் வரை ஸ்டேட் வங்கியில் தான் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஆன்லைன் மோசடிக்காக துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பெரும்பாலும் அதாவது நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தான் என்கிறது வழக்கின் புள்ளிவிபரம்.
தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையுடன் பயணிக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவே மோசடி கணக்குகளில் முதன்மையாக இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பொருளாதார பிரச்சனை அதிகமாகி நாட்டின் நிம்மதியை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.