விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்திப்படம் இது. படத்தின் தலைப்பை பார்த்ததும் இது ஏதோ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை பற்றிய படம் என நினைத்து விடாதீர்கள். ஒரு கிறிஸ்துமஸ் இரவுக்குள் நடந்து முடிகிற கிரைம் திரில்லர் கதை.
மும்பை மாநகரம் `பம்பாய்’ என அழைக்கப்பட்ட காலத்தில் என கூறி அறிமுகம் ஆகும் போதே ஆகா படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என தெரிந்து விடுகிறது. அந்த ஆர்வத்தை படம் முழுக்க எடுத்து சென்று, இக்கதை இப்படித்தான் போகும் என கணிக்க முடியாத அளவுக்கு திகிலும், திருப்பமுமாக சென்று இருக்கிறார். டைரக்டர் ஸ்ரீராம் ராகவன். அதுக்காகவே ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.
ஒரு கொலை வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனையை சிறையில் கழித்து விட்டு கிறிஸ்துமசுக்கு ஒரு நாள் முன்பு வீடு திரும்புகிறார். விஜய்சேதுபதி. உணவகத்தில் சாப்பிட செல்லும் போது அங்கு தனது குழந்தையுடன் வருகிறார், கத்ரினா கைப். இருவரும் எதேச்சையாக பேச ஆரம்பிக்க அது நல்ல நட்பாகி, தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார் கத்ரீனா. அவருடன் செல்கிறார், விஜய் சேதுபதி.
வழியில் அவரிடம், ‘‘தனது கணவர் போதைக்கு அடிமையாகிவிட்டவர் என்றும், தன் மீது சந்தேகப்பட்டு தினசரி கொடுமை செய்வதாகவும் சொல்ல – ஆறுதல் கூறுகிறார், விஜய் சேதுபதி. தூங்கிய குழந்தையை வீட்டில் படுக்கவைத்துவிட்டு இருவரும் மீண்டும் வெளியே போகிறார்கள். திரும்பி வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டுக்குள் கத்ரீனா கைப்பின் கணவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்க இருவரும் பதறி போய் விடுகிறார்கள். அவரை கொன்றது யார்? கொலைக்கு காரணம் என்ன என்பதை கண்டு பிடிப்பது தான் மீதிக்கதை.
96 படத்தில் பார்த்த விஜய் சேதுபதியை மீண்டும் பார்த்த மாதிரியே இருக்கிறது. பல வருடமாக ஜெயிலில் இருந்து வெளியே வந்தவனுக்கு அழகிய ஒரு பெண்ணின் அன்பும், பரிசமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியே மகிழ்ச்சியில் திளைப்பார் அல்லவா? அதே மாதிரி தான் விஜய் சேதுபதியும், அழகி கத்ரீனாவை கண்டதும் காதல் கொள்வதும், மகிழ்ச்சியை மனதுக்குள் போட்டு பூரிப்பதுமாக முதல் பாதி முழுக்க காதலனாகவும், பிற்பாதியில் கனமாகவும் நடித்து இருக்கிறார்.கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு மனசை பிசைகிறது.
விஜய் சேதுபதிக்கு சரிசமமான நடிப்பில் கத்ரினா கைப். ‘தன் கணவன் தன்னை துன்படுத்துவதை சொல்லி கண் கசியும் போது நமக்கே அவர் மீது ஒரு அனுதாபம் வந்து விடுகிறது. அப்படி பட்டவர் தனது இன்னொரு முகத்தை காட்டும் போது, அதிர்ச்சி, மர்மம், பதற்றம், வஞ்சகம், காதல், பாசம், கோபம் எனப் பல பரிணாமங்களை அனாசயமாக காட்டுகிறது அவரது முகம். இந்திப்படம் என்றாலும் படத்தில் நம்மூர் நட்சத்திரங்களான ராதிகா சரத்குமார், ராஜேஷ், சண்முக ராஜான் ஆகியோரும் உண்டு. மூவரும் தங்களது அனுபவ நடிப்பால் பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி காதலியாக ராதிகா ஆப்தே. கொஞ்ச நேரமே வருகிறார். பிரதீப் குமார். எஸ், அப்துல் ஜபார், பிரசன்னா பாலா, நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் இனைந்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள். அதனால் தானா என்னவோ படத்தின் அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை. சபாஷ்!
கண்களை உறுத்தாத கச்சிதமான ஒளிப்பதிவை.மது நீலகண்டன் தந்து இருக்கிறார் என்றால் டானியல்.பி.ஜார்ஜின் பின்னணி இசை சஸ்பென்ஸ், த்ரில்லர், ரொமான்ஸ் என எல்லா தருணங்களிலு ம் அட்டகாசம் செய்திருக்கிறது.
காதுகளுக்கு இனிமை சேர்த்து இருக்கிறார், இசை அமைப்பாளர் பிரித்தமின். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை ரொமான்ஸ், டார்க் ஹ்யூமர் கலந்த ஃப்ளேவரில் கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். டைரக்டர் முதல் பகுதி நிதானமாக போனாலும், பிற்பகுதி படு வேகம் பரபரப்பு.