ஆளுநர் தொடர்பான கருத்திற்காக விமர்சனத்திற்குள்ளனான நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தான் மறைமுகமாக ஆளுநரை விமர்சித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய , இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், ’தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் ஆளுநர் ரவி. அவருக்கு என்னுடைய மரியாதையை தெரியப்படுத்துகிறேன். தமிழ் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது. ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நானும் உடன் இருக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார்.
பார்த்திபனின் பேச்சிற்கு, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இதற்கு பதில் தரும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அதில், “ நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன். உ வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுனருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன்.
தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல” என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்! அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட தொனியில் நான் பேசுவதைக் கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை “இது ஒரு வகையான positive politics “ என்றார். பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்.
தொடர்ந்து எங்கப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா”கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு” கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன்.
காச நோயைக் கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாகக் கூறி “கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும். மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார். எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன்.
தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி” எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய் 1-தமிழ் 2-தமிழ் 3-தமிழ் என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு: பத்ம விருதோ கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன். ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ’தமாய் பாடக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.