திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் மலை மேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த இரண்டாம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி மூலவருக்கு தினசரி பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாலையில் உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மயிலம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து சாமி தரிசனம் செய்த பின் அவர் சென்னை புறப்பட்டு சென்றார். இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜி. ரவி, குரு, கருணாகரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திண்டிவனம் வழக்கறிஞர் எம்.டி. பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.