புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் 10 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு வளர்வதற்காக ஐடிபி வங்கி சார்பில் திஷா பவுண்டேஷன் மூலம் ரூ.97 லட்சம் முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தொகையின் மூலம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5,000, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அரசு சார்பு நிறுவனமான கான்பெட் தீபாவளி சிறப்பங்காடியில் சர்க்கரை1 கிலோ, செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 3 கிலோ, துவரம் பருப்பு 500 கிராம், வெள்ளை உளுந்து 500 கிராம், கடலைப் பருப்பு 500 கிராம், பச்சைப் பருப்பு 500 கிராம், பொட்டுக் கடலை 250 கிராம்,மைதா 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ ரவை1 கிலோ ஆகிய ரூ.1,000 மதிப்புள்ள 10 மளிகைப் பொருட்கள் ரூ.500க்கு மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அறிவித்தபடி தீபாவளிக்கு 10 கிலோ இலவச அரிசி 2 கிலோ சர்க்கரை தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரியில் 30 ரேஷன் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூலம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எந்த குழப்பமும் அடையாமல் அந்தந்த பகுதிகளில் வாங்கிக் கொள்ளலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.