தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், புதுச்சேரியில் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் வருகின்ற 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் பட்டாசு, ஆடை, ஆபரணங்கள், இனிப்பு வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக புதுச்சேரியின் முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி, மிஷின் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதே நேரத்தில் ஞாயிறுதோறும் நடைபெறும் சண்டே மார்க்கெட் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்து புகழ்பெற்றது. இங்கு 2000 க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளதுள்ளது.
ஏழை எளிய மக்கள் அனைத்து வகையான பொருட்களையும் குறைந்த விலையில் இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். பேரம் பேசி வாங்க ஏதுவாக உள்ள இடம் ஆதலால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். தற்போது தீபாவளியையொட்டி சண்டே மார்க்கெட் உள்ள காந்தி வீதி முழுவதும் வெறும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டன. பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
புதுச்சேரி நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதி மட்டுமில்லாமல், புதுச்சேரி ஒட்டி உள்ள தமிழக பகுதி கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் தங்களுக்கு துணிமணிகளை வாங்குவதற்காக சண்டே மார்க்கெட் கடை வீதிகளில் குவிந்ததால் நகரம் மற்றும் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.