புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மணவெளியில் புதுக்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று சுவர் இடிந்து விழுந்துள்ளது.
உடனே மாணவர்கள் அலறியபடி அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி 4ம் வகுப்பு படிக்கும் பவன்குமார் (8), பவின் (8), 5ம் வகுப்பு படிக்கும் தேஷிதா (10) ஆகியோருக்கு கை, கால், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக காயமடைந்த மாணவர்களை ஆசிர்யர்களும் பொதுமக்களும் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம், அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இச்சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.