திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தில் 5 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தொடர் களப்பணிகளின் போது நாட்டேரி கிராமத்தில் ஆவணப்படுத்தப்படாத கல்வெட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச. பாலமுருகன், லோகேஷ், சி.பழனிச்சாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு ஸ்ரீதர், நந்தகுமார் ஆகியோர்கள் ஊர்பொதுமக்கள் உதவியுடன் கூட்டாக ஆய்வு செய்து கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.
நாட்டேரி கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள பாழடைந்த கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகள் 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக கிடைக்கின்றன. கல்வெட்டுகள் அமைந்துள்ள கற்கள் சிதறி காணப்படுவதாலும் இந்த கோயிலிலில் இருந்து கற்கள் பலவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள நாட்டேரி பெரிய ஏரியில் கலிங்குப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாலும், எஞ்சிய கற்கள் ஊரில் உள்ள சிவன் கோயில் கட்டப் பயன்படுத்தப்பட்டதாலும் கல்வெட்டுகளின் முழுவிவரம் அறியப்பெறவில்லை. எனினும் கிடைத்த கல்வெட்டுகளின் படி, இவை நிலதானத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அளிக்கின்றன. இவ்வூர் இறைவன் பெயர் போந்தை பெருமான் என்றும் அந்த கோயிலுக்கு நிலம் இறையிலியாக விடப்பட்தென்றும் தெரியவருகிறது. மேலும் இவ்வூரில் பெருங்குறி மகாசபை என்ற அமைப்பு இருத்தென்றும் இந்த அமைப்பு ஊர் நிர்வாகத்தையும் கோயில் நிர்வாகத்தையும் நிர்வகித்த செய்திகள் தெரியவருகின்றன. மேலும் இவ்வூர் கல்வெட்டில் சுந்தரசோழப்பேரேரி என்ற குறிப்பும் காணப்படுகிறது. தற்போதை நாட்டேரி என்பது இந்த சுந்தரசோழப் பேரேரி என்பதலிருந்தும் வந்திருக்கலாம். மேலும் இந்த ஊரில் உள்ள அனுமன் கோயில் எதிரில் ஒரு தூணில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும் உள்ளது. இந்த கல்வெட்டு 10/11 நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. இக்கல்வெட்டில் பெருங்குறி மகாசபையின் செயல்பாடுகள் பற்றிய தகவல் கிடைக்கின்றது. மேலும் இக்கோயில் அருகே உள்ள பலகைக்கல்லில் விஜயநகர அரசன் கம்பணன் காலத்து கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதியை ஜெயங்ககொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு பிரம்மதேசப்பற்றில் உள்ளதாக குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் அவ்வூரில் திருவிடையாட்டமாக நிலம் தானம் செய்யப்பட்டது பற்றி குறிப்பிடுகிறது. எனவே இவ்வூரில் விஷ்ணு கோயில் இருந்ததற்கான குறிப்பும் கிடைக்கப்பெறுகிறது. இக்கல்வெட்டு குறிப்பிடும் திருபோந்தை ஆழ்வார் என்பதும் பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயில் இறைவன் போந்தை ஆழ்வார் என்பதும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மதேசம் ஊரில் உள்ள செல்லியம்மன் ஆலய கல்வெட்டுகள், கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகள், சந்திரமௌலீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் நாட்டேரி கல்வெட்டுகள் ஆகியவற்றை முழுமையாக கணக்கில் கொண்டால் சுமார் 130 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருக்கும். இவற்றை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் சோழர்காலத்தைப் பற்றியும் அப்பகுதி நீர்மேலாண்மைப் பற்றியும் மேலும் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரம்மதேசம் கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகளும், நாட்டேரி கல்வெட்டுகளும் பாதுகாப்பின்றி உள்ளதால் உடன் சீரமைத்து வைக்க அரசு முன்வர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.

