திருவண்ணாமலை, டிச. 18-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை நகராட்சியில் இன்று நடைபெறும் முகாமில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 13 துறைகளை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் சிறப்பு முகாம் 4 நகராட்சிகளில் 25 முகாம்களும், 10 பேரூராட்சிகளில் 20 முகாம்களும் என வார்டு வாரியாக 45 முகாம்கள் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் 18, 19, 21, 22, 27, 28, ஜனவரி 2, 3 ஆகிய தேதி வரை நடைபெறுகிறது. ஆரணி நகராட்சியில் 18 19, 21, 22, 27, 28, ஜன 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்யாறு, திருவத்திபுரம் நகராட்சியில் டிச. 20, 22, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. வந்தவாசி நகராட்சியில் டிச.20, 21, 26, 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் டிச.28, 29ஆம் தேதி, வேட்டவலம் பேரூராட்சியில் வரும் ஜன 2, 4ஆம் தேதி, செங்கம் பேரூராட்சியில் டிச, 26, 27, 28ஆம் தேதி, புதுப்பாளையம் பேரூராட்சி யில் டிச.29ஆம் தேதி, போளூர் பேரூராட்சியில் டிச.19, 20, 21ஆம் தேதி, களம்பூர் பேரூராட்சியில் டிச. 22, 26ஆம் தேதி, கண்ணமங்கலம் பேரூராட்சியில் இன்று 18 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது, சேத்துப்பட்டு பேரூராட்சியில் வரும் ஜன.2, 3, 4ஆம் தேதி, தேசூர் பேரூராட்சியில் வரும் ஜன.3ஆம் தேதி, பெரணமல்லூர் பேரூராட்சியில் வரும் ஜன.4ஆம் தேதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு மின்வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, காவல், மாற்றுத்திறனாளிகள் நலம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம், வாழ்வாதாரக் கடன் உதவிகள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக மக்கள் வழங்கலாம். இந்த மனுக்கள் மீது 30 நாட் களுக்குள் தீர்வு காணப்படும். உரிய ஆவணங்களை இணைத்து மனு அளிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.