திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் எனும் ஊரிலுள்ள சிங்கமலை அடி
வாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறைக் கீறல்கள் உள்ளன என்று உள்ளூர்வாசிகளான இரவிச்சந்திரன் மற்றும் சின்னதுரை ஆகியோர் அளித்த தகவலின்படி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களான பாரதி ராஜா, சீனுவாசன், ச.பாலமுருகன், சி. பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்ததில் வரலா
ற்று சிறப்புமிக்க கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குகையின் மேற்கு நோக்கிய பாறையில் சுமார் 4 மீட்டர் உயரம் 7 மீட்டர் அகலத்தில் கற்செதுக்கு உருவங்கள் காணப்படுகின்றன. குகையின் தரைப்பகுதியில் உள்ள இரு சிறிய பாறைகளைப்பயன்படுத்தி உயரமான இடங்களில் உருவங்களை செதுக்கியுள்ளனர். குகை சுவற்றின் மேற்பகுதியில் திமிலுடன் கூடிய காளையும், அதன் வால்பகுதியின் அருகில் ஒரு மனிதனும் காணப்படுகிறார். அதற்கு கீழ் வலப்பகுதியில் மற்றுமொரு திமிலுடன் கூடிய காளையும் அந்த காளையின் கழுத்துப் பகுதிக்கு கீழ் ஒரு மனிதனும், முகத்திற்கு முன்புறம் இரண்டு மனிதர்களும் செதுக்கப்பட்டுள்ளனர். இந்த காளையின் வால்பகுதி முடியுமிடத்தில் ஒரு மனிதன் காணப்படுகிறார். இவர் இங்குள்ள மற்ற மனித உருவங்களைக் காட்டிலும் உடல்வாகு பெற்றவர் என்பதை விளக்க அவருடைய கைகளை வலிமையான புஜத்துடன் காட்டியள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். இவரின் கீழே இரண்டு விலங்குகள் புணர்வது போலவும் அதன் கீழ் பகுதியில் காட்டுப்பன்றி/மாடு போன்ற உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது. இவ்விலங்கைச் சுற்றி மூன்று மான் அல்லது நாய் போன்ற விலங்குகள் வெவ்வேறு திசைகளில் காணப்படுகின்றன. பாறைச்சுவற்றின் இடப்புறம் திமிலுடன் கூடிய இரு காளைகள் எதிரெதிர் திசைகளில்நின்று முகத்தோடு முகம் ஒட்டியவாறு பெரிய அளவில்காணப்படுகின்றன. இக்காளைகளின் கீழ்ப்பகுதியில் மூன்று கன்றுகள் அல்லது நாய்கள் போன்ற உருவங்கள் தென்படுகின்றன. இதைத்தொடர்ந்து இரு மனிதர்கள் அருகருகே அமர்ந்துள்ளவாரும் செதுக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் ஒரு மனித உருவமும காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள இந்த செதுக்கு உருவத்தொகுதியில் சுமார் பத்து மனித உருவங்களும் பத்திற்கும் மேற்பட்ட விலங்குகளின் உருவங்களும் காணப்படுகின்றன. இதை குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் அவர்கள் கூறுகையில் “இந்த குகைக் சுவற்றில் கால்நடை சமூகம் சார்ந்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களில் திமிலுடைய மாடுகளும் அவற்றைச் சுற்றி கையில் எவ்வித ஆயுதங்களும் இன்றி மனிதர்களும் காணப்படுவதால் ஒருவேளை மாடுகளை பிடிப்பது போன்ற அணுகு முறையில் செதுக்கப்பட்டிருக்கலாம். வேட்டை சமூகம் கால்நடை சமூகமாக மாறும் போது வனத்திலுள்ள மாடுகளை பிடித்து பழக்கப்படுத்துவது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கற்செதுக்குகளும் அதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டிருக்கலாம். மேலும் இங்குள்ள மனிதர்கள் மாடுகளை பிடிப்பது போன்ற கை பாவனையோடு காணப்படுவதால் இன்றைய ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு ஒத்தநிகழ்வாக இவற்றை கருதலாம். நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அருகேயுள்ள அணைக்கட்டி பாறையோவிங்களிலும் இங்குள்ளதை போலவே மாடுகளைப் பிடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இம்மலையின் தென்மேற்கு பகுதியிலுள்ள செத்தவரை அய்யனார் மலையிலுள்ள பாறை ஓவியங்களிலுள்ள காளைகளைப் போன்றே இங்கும் செதுக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இக்கற்செதுக்கு உருவங்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதுபோன்ற செதுக்கு உருவங்கள் வெகுசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது என்பதால் இந்த இடத்தை பாதுகாப்பதோடு, சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்களை பெறலாம் என்றார்.

