உளுந்தூர்பேட்டை அருகே போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலத்தை பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் மரியகிளாரா என்பவர் தந்தையின் பெயரில் இருந்த சொத்தை அவரது உறவினர்களான ஆரோக்கியம்மாள் ஆரோக்கியசாமி ஜோசப்ராஜ் ஆகிய மூன்று பேரும் போலியாக வாரிசு சான்று பெற்று கடந்த 2022 ஆம் ஆண்டு 2 ஏக்கர் குடும்ப சொத்தை பட்டா மாற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக மரியகிளாரா உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதைத் தொடர்பான ஆவணங்களை மரிய கிளாரா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் எலவனாசூர்கோட்டை போலீசார் இந்த புகார் தொடர்பாக குற்ற எண் 196/2022ன் படி 120b, 198, 420, 463, 464, 466, 467, 468, 471 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆரோக்கியம்மாள், ஆரோக்கியசாமி, ஜோசப் ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆவணங்களை போலியாக தயார் செய்து பட்டா மாற்றம் செய்த எறையூர் கிராம நிர்வாக அலுவலர் அமர்நாத்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனி நபர்களின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்து கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.