கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவதெல்லாம் மக்களிடம் என்றைக்குமே எடுபடாது என்று தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
2 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று முன்தினம் நெல்லை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பூங்காவில் 3,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கல உற்பத்தி ஆலையை முதலமைச்சர் திறந்து வைத்து, உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர், முதல் சோலார் பேனலில் வாழ்த்துகள் என எழுதி கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதேபோன்று 3,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் மாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கட்டப்பட்டு வரும் பார்வையாளர் மாடத்தை ஆய்வு செய்த முதலமைச்சர், வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றார். சாலையோரம் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் நடந்து சென்று பொது மக்களை சந்தித்த முதலமைச்சர், முருகன் குறிச்சியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடினார்.
தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதியில் ரூ.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட பாளையங்கோட்டை தினசரி சந்தை, புதிய வணிக வளாகம், காய்கனி சந்தை உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இருட்டுக்கடை அல்வாவை ருசித்த முதலமைச்சர்
இதையடுத்து நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்ற முதலமைச்சர், பிரபல அல்வாவை ருசித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோரும் அல்வா வாங்கி சாப்பிட்டனர். முதலமைச்சர் இருட்டுக் கடை அல்வா கடைக்கு வந்ததை சற்றும் எதிர்பாராத கடை ஊழியர்களும், பொதுமக்களும் ஆச்சரியமடைந்தனர்.
பின்னர் பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அங்கு பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் தயா சங்கர், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது என்று தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிசெய்யும் இயக்கம் திமுக என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை சுற்றுலா மாளிகையில் மாஞ்சோலை மக்கள் மற்றும் மீனவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்கிறார்.