வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.
திண்டுக்கள் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக விவசாயம் செழிப்படைய வேண்டி ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் பௌர்ணமி தினத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்க ஊரில் உள்ள சிறுமிகளை எட்டு நாள் மாசடைச்சி அம்மன் கோவிலில் வைத்து வழிபாட்டில் ஈடுபடுத்தினர்.
அதில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த ஆனந்தன் தமிழ்ச்செல்வி தம்பதியின் 13 வயது மகள் தீக்சா என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நிலா பெண் தீக்சாவை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்று ஆவாரம் பூக்களை கொண்டு அலங்காரம் செய்தனர்.
பின்னர் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையை சுமந்தபடி சிறுமியை ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வந்து, மாரியம்மன், மாசடச்சி அம்மன் கோவிலிலும் அமர வைத்து முறை மாமன்கள் சடங்கு நடத்தி பெண்கள் சீர் செய்தனர்.
தொடர்ந்து ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டு, மண் கலயத்தில் விளக்கு ஏற்றி தண்ணீரில் மிதக்க விட்டு வழிபாடு நடத்திய பின்னர் அதிகாலையில் கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு ஏழு நாட்கள் அணையாமல் எறிந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். இந்த வினோத வழிபாட்டை 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.