செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா தம்பதிகளுக்கு இரண்டு மகள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் தியா(18) தொலைதூரக் கல்வியும், மகன் தீபக்(15) பத்தாம் வகுப்பும் மற்றும் இளைய மகள் பிரியங்கா(13) செஞ்சி காந்திபஜார் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் வெங்கடேசபெருமாள் உயிரிழந்த நிலையில், நீலா கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதி சேர்ந்த தேனன் என்பவரின் மகன் சரவணன்(25) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிரியங்கா பள்ளிக்கு செல்லும்போது அவரை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியதாகவும், இதனால் பயந்த பிரியங்கா தன் தாய் நீலாவிடம் கூறி அழுதுள்ளார்.
இதனை அடுத்து நீலா சரவணன் தந்தையான தேனன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.
அப்போது சரவணன் குடும்பத்தினர் என் மகனால் உங்கள் மகளுக்கு எவ்வித தொல்லையும் வராது என வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பிரியங்கா மற்றும் அவரது அண்ணன் தீபக் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது பிரியங்காவை வழிமறித்த சரவணன் தன்னை காதலிக்க மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் தாயிடம் தெரிவித்தநிலையில், காலையில் பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாய் நீலா செஞ்சி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் செஞ்சி த.வெ.க பொருளாளர் சரவணன் மற்றும் குண.சரவணன் மனைவிமான சங்கீதா ஆகியோர் மீது போக்சோ, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சங்கீதாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.