சேலம் அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை 45 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே ஏத்தாப்பூர் பகுதியில் முத்துமலை முருகன் கோவிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை 111 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைக்காண ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல் தற்போது சேலம் அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உள்ள ராஜ லிங்கேஸ்வரர் கோவிலில், உலகிலேயே அதிக உயரமான நந்தி சிலை 45 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து கோவில் தலைவரும் மகா அதிகார நந்தி கோவில் நிறுவனருமான ஸ்ரீ ராஜவேல் சுவாமிகள் கூறுயதாவது:
சேலத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 45 அடி உயரத்தில் மகா நந்தி சிலை அமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உலகிலேயே உயரமான நந்தி சிலை இது ஆகும். இது ஒரு வரலாற்று நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நந்தி சிலையின் வயிற்றுக்குள் 15 அடி உயரத்தில் சிவபெருமான் அருள்பாலித்து வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பு ஆகும்.
இங்கு வந்து நந்தியையும் சிவனையும் வணங்கினால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வந்து மகா நந்தி சிலையை வணங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.