ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து, கடந்த 5ம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வந்தார். 14 சுற்றில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 96,450 வாக்குகள் பெற்று, வெற்றியை உறுதி செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் பெற போராடி வந்தார்.
இறுதியாக 17 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேநேரம், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார். டெபாசிட் பெற 25,673 வாக்குகள் தேவை என்கிற நிலையில் 23,810 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். அதேபோல் நோட்டா மூன்றாம் இடம் பிடித்தது.
2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 798 நோட்டோ ஓட்டுகள் மட்டுமே பதிவான நிலையில் தற்போது 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கான வாக்கு சதவிகிதமும் கடந்த தேர்தலைவிட இம்முறை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.