திருவாரூரில் தாய் மற்றும் மகளிடம் ரூ ஒரு கோடியே 23 லட்சம் ஏமாற்றிய தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் தண்டலை அருகே தியானபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி மனைவி கமலா (55). இதேபோல் அதே ஊரில் வசித்து வருபவர் ரெங்கநாதன் மனைவி மீனாம்பாள்.
இருவரது குடும்பமும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கமலாவிடம் அதிக அளவில் தொகை இருப்பதை தெரிந்து கொண்ட ரெங்கநாதனின் மகன்களான ஹரிஹரசுதன் (33)மற்றும் ராம்ஜி (31) இருவரும் கமலாவிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து கடந்த 2020 ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரையில் ரூ ஒரு கோடியே 23 லட்சம் அளவில்தொகை பெற்றுள்ளனர்.
மேலும் இவ்வாறு பெரும் தொகையினை நம்ப வைக்கும் வகையில் கமலாவின் மகளான நிஷாந்தி என்பவரின் வங்கி கணக்கிற்கு அவ்வப்போது சிறு, சிறு தொகைகளை லாபம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர் சந்தேகம் ஏற்படவே தொகையை கொடுக்குமாறு கமலா கேட்டபோது, சிறிது காலத்தில் கொடுத்து விடுவதாகக் கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி தொகை பெற்றதற்காக சகோதரர்களில் ஒருவரான ராம்ஜி என்பவர் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். இதற்கு சாட்சியாக அவரது தாய் மீனாம்மாள் மற்றும் தந்தை ரெங்கநாதன் ஆகியோர் கையெழுத்துட்டுள்ளனர்.
ஆனால் தெரிவித்த காலத்திற்குள் தொகை கொடுக்காததால், இது குறித்து கமலா திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்படி ரெங்கநாதன் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கமலாவிடம் பெற்ற தொகையினை திருவாரூர் மற்றும் சென்னையில் வீடு மற்றும் வேறு சில சொத்துக்களும் வாங்கி இருப்பது தெரிய வந்ததுடன், இதேபோன்று மேலும் பலரிடமும் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் ரெங்கநாதன், ஹரிஹரசுதன் மற்றும் ராம்ஜி மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.