செல்லாத மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பினார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது.
அப்போது அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, “காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை ஆளுநர் நிறுதிவைத்துள்ளார். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுஎப்படி முடியும்..?. மசோதாக்களை நிறுத்தி வைத்தப் பின்னர், பிறகு எப்படி குடியரசுத்தலைவர் பரிசீலனைக்கு மசோதாக்களை அனுப்ப முடியும்..?
ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என்று முன்னர் வாதம் வைத்தீர்கள், அப்படியெனில் செல்லாத மசோதாவை குடியரசுத் தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் ? என்று ஆளுநர் தரப்பிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பு வாதிடுகையில், “பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குழுவில் ஆளுநர் தலையிட்டு தடுக்கிறார். எனவே வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் திருத்த மசோதா இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார் ” என்று வாதிடப்பட்டது.
அப்போது, மசோதா மீது ஆளுநர் எடுக்கும் முடிவு வெளிப்படையாக மாநில அரசுக்கு ஏன் தெரிக்கப்படவில்லை..? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன் ஆளுநருக்குத் தனியாக விருப்ப உரிமைகள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஆளுனர் தரப்பு விளக்கம் அளிக்கையில், “துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்ற முடிவு, ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயல். அதிகாரம் அனைத்தையும் மாநில அரசே வைத்து கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. அதனைத்தொடர்ந்து எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க இரு தரப்புக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.