சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த மேஸ்திரி, எதிரில் இருந்த பெருமாளைப் பார்த்து,
” மோசடி ஆசாமிகள்தான் ரூம்போட்டு பெண்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுப்பார்கள். ஆனால், இப்போ அதை சில பெண்களும் செய்கிறார்களே?” என்று ஆச்சர்யப்பட்டு கேட்டார்.
” சென்னையைச் சேர்ந்த திவ்யா என்கிற பெண்மணி, டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதில் எப்படியோ சிக்கிக் கொண்டிருக்கிறான், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்.
நேராக ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து லாட்ஜ்ல ரூம்போட்டு அந்த சிறுவனை ரூமுக்கு வரவழைத்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டிருக்கிறார் திவ்யா. பயந்துபோன அந்த சிறுவன் தப்பித்து ஓடியிருக்கிறான். ஆனால் விடாமல் அவனுக்கு மீண்டும் போன் செய்து வரச் சொல்லி இருக்கிறார் திவ்யா.
அந்தச் சிறுவனோ துணைக்கு தன் தோழனையும் அழைத்துக் கொண்டு மறுபடி ரூமுக்குப் போயிருக்கிறான். அறைக்கு வந்த அவர்கள் இருவருக்கும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதை தன் தோழி மூலம் வீடியோவும் எடுத்திருக்கிறார், திவ்யா. பயந்துபோன சிறுவர்கள், பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்ல, மகளிர் போலீஸ், திவ்யாவையும் அவரது தோழியையும் அவர்களுக்குத் துணையாக இருந்த இரண்டு ஆண் நண்பர்களையும் கைது செய்திருக்கிறார்கள்! “
” பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு ஊட்டில 3 ஸ்டார் ஒட்டல் இருக்காமே?” என்றார் மேஸ்திரி.
” அது ரொம்ப வருஷமா இருக்கு மேஸ்திரி. இப்ப அந்த ஓட்டல் மானேஜரா இருந்தவருக்கு, வாட்ஸ் அப்ல மிதுன் அனுப்புவதாக ஒரு போன்ல இருந்து, மெசெஜ் வந்திருக்கிறது. ‘ஒரு முக்கிய வேலை விஷயமா குன்னூர் வந்திருக்கிறேன். என்னுடைய செல்போன் சிக்னல் பிரச்னையால் பேச முடியவில்லை. கீழே உள்ள இரண்டு வங்கிக் கணக்குக்கு ரூ. 20 லட்சத்தை அனுப்பி வையுங்கள் தாதா” என்று வந்திருக்கிறது.
மிதுன், தன்னை ‘தாதா’ என்றுதான் அன்பாக அழைப்பார் என்று நம்பிய அந்த மானேஜர், அவர் சொல்லி இருந்த இரண்டு வங்கிக் கணக்குக்கும் 20 லட்சத்தை ஆன்லைனில் அனுப்பி இருக்கிறார். சில நாள் கழித்து, வேறு ஒரு விஷயம் பேச மும்பையிலிருந்து மிதுன், தன் ஊட்டி மேலாளரை அழைத்திருக்கிறார். அவரிடம் மேலாளர், ‘நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியில் இருந்த இரண்டு வங்கி நம்பருக்கும் 20 லட்சத்தை அனுப்பி விட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
அதிர்ச்சி அடைந்த மிதுன், ‘நான் அனுப்பச் சொல்லவில்லையே?” என்று சொல்லி இருக்கிறார். குழப்பமடைந்த மேலாளர் போலீஸில் புகார் கொடுக்க, விசாரணையில் அவர் பணம் அனுப்பிய அந்த இரண்டு வங்கி நம்பர்களில் ஒன்று கேரளாவிலும் மன்றொன்று நாக்பூரிலும் இருந்திருக்கிறது. போலீஸ் விசாரணையைத் தொடர்கிறார்கள்” என்று விபரமாகச் சொன்னான் பெருமாள்.
” மோசடி ஆசாமிகள், ரூம்போட்டு யோசிப்பாங்க போல” என்றவர்,
” கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர், எதோ சால்ஜாப்பு சொல்லி இருக்காங்க போல?” என்றார்.
” ஆமா மேஸ்திரி, இலங்கை கடற்படை துணை அட்மிரல் காஞ்சனா பனகோடா, ‘மீனவர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு, தெரியாமல் நடந்துவிட்டது’ என்று சொல்லி இருக்கிறார். இந்திய அரசு தரப்பிலிருந்து கண்டிப்பாக கேட்க ஆளில்லாததால்தான், இலங்கை இப்படி நடந்து கொள்கிறது” என்று சலித்துக் கொண்டான் பெருமாள்.
” பரந்தூர்ல விமான நிலைய வேலைகள் மறுபடி துரிதமா நடக்குதாமே?” என்றார் மேஸ்திரி.
” மொத்தம் 5,300 ஏக்கர் நிலம் இதுக்கு தேவை. இதுல 3,600 ஏக்கருக்கு சொந்தக்காரங்ககிட்ட ஏஸ்கனவே அரசு இழப்பீடு கொடுத்து வாங்கி இருக்கு. இப்ப மீதி உள்ள 20 கிராமங்களில் உள்ளவங்களுக்கு மூன்றரை மடங்கு அதிகமாக கொடுக்க உத்திரவாதம் கொடுத்திருந்த தமிழக அரசு, இப்போ அதை 5 மடங்கு உயர்த்தி, இழப்பீடா கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம். அதுனால அந்த கிராம மக்கள் இறங்கி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த விமான நிலைய மொத்த பட்ஜெட் ரூ.29,150 கோடி என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது” என்றான் பெருமாள்.
” சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ பராசக்தி’ படம் டைட்டில் பிரச்னை முடிவுக்கு வந்ததா?” என்று கேட்டார் மேஸ்திரி.
” ‘முறையான அனுமதி வாங்கித்தான் டைட்டில் வைத்திருக்கிறோம்’ என்று அறிவித்திருக்கிற தயாரிப்பு தரப்பு, படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டிருக்கிறார்கள். 1960ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சில மாணவர்களின் உண்மைக் கதையாம் இந்தப் படம் ” என்று முடித்துக் கொண்டான் பெருமாள்.