பிறப்பு
திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 1925ல் பிறந்தார். நல்லக்கண்ணு அவர்கள் 18ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர்
சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நல்லக்கண்ணு இருந்தார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். இப்போது மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர்.
ஜனசக்தி பத்திரிகை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2,000 ஆயிரம் நெல் மூட்டைகள் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து 2,000 நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.
7 ஆண்டுகள் இருட்டறை
கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். 7 ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை, அவர் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.
அம்பேத்கர் விருது
இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.1 கோடி வசூலித்து கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ரூ.1 லட்சம் வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
சாதி எதிர்ப்புப் போராளி
சாதீய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சாதீய ஒடுக்கு முறைகள் மேலோங்கியிருக்கும் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் பிரிவில் பிறந்தவர்.
விருதுகள்
தமிழக அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்றுள்ளார்.