கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா திருவிழா டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 26ஆம் தேதி தேரோட்ட விழாவில் உற்சவராக தேருக்கு மூலவர் நடராஜ பெருமான் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.இந்நிலையில் நேற்று 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் தடை விதித்து கனகசபையின் கதவு மூடப்பட்டது.
தகவல் அறிந்ததும் இந்து அறநிலையத்துறை துணை கமிஷனர் சந்திரன், தில்லை காளியம்மன் கோயில் செயல் அங்கம் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் நடராஜர் கோயிலுக்கு நேற்று சென்றனர். அங்கு கோயில் பொது தீட்சிதர்களிடம் அரசாணைப்படி கனக சபையில் ஏறி சாமியை தரிசிக்க பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
பொது தீட்சிதர்கள் மறுப்புத் தெரிவித்து, இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உரிய உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றும் டிசம்பர் 25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் மட்டும் கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் கூறினர்.இதையடுத்து கோர்ட் உத்தரவை காட்டுங்கள் என அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு வழக்கு நிலுவையில் இருப்பதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர். இதை ஏற்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்து, பக்தர்களை வழக்கம் போல் அனுமதிக்க வேண்டும் என கண்டிப்பாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனி மாதம் நடந்த திருவிழாவின் போது, இதேபோல் 4 நாட்களுக்கு கனக சபையில் ஏறி நடராஜர் பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான அனுமதியை நிர்வாகத்தினர் ரத்து செய்து, அறிவிப்பு பலகை வைத்தனர். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததால் இந்த முறை அறிவிப்பு பலகை வைக்காமல் கனகசபையில் ஏறி தரிசிக்க கோயில் நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தில்லை காளியம்மன் கோயில் அலுவலர் சரண்யா அளித்துள்ள புகாரில் பக்தர்கள் கனக சபை மீது ஏறி வழிபட தீட்சதர்கள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்க சென்ற பொழுது 5ற்கும் மேற்பட்ட தீட்சதர்கள் தங்களை மிரட்டும் தோணியில் பேசியதாகவும் மேலும் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.