குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத் துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள சைனகுண்டா, வீரிசெட்டி பள்ளி பரதராமி, கொட்ட மிட்டா, மோர்தனா, டி.பி.பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவற்றை விரட்டும் பணியில், குடியாத்தம் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை பயங்கர சத்தத்துடன் பிளிறியபடி விவசாய நிலத்திற்குள் நுழைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் காட்டு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
யானை மீண்டும் விவசாய நிலத்துக்குள் நுழையும் என்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்டியடிக்க குடியாத்தம் வனபகுதிக்கு கும்கி யானை வரவழைக்க வேண்டும் என்று விவசாயிகளும், கிராமப்புற மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.