4 பேர் தப்பியோட்டம்
திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்க் மேலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்ரோல் பங்கில் தகராறு
திருவண்ணாமலை – வேலூர் சாலையில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, பின்னால் வரும் நண்பர்கள் பணம் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டு அங்கேயே இருந்துள்ளனர். அவர்கள் கூறியது போன்று சிறிது நேரத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் பெட்ரோல் போடுவது போன்று வந்துள்ளனர்.
பெட்ரோல் பங்கில் இருந்த பணியாளர் ஏற்கனவே மோட்டார் சைக்கிளுக்கு போட்ட பெட்ரோலுக்கு பணத்தை கேட்டு உள்ளார். அவர்களுக்கு நாங்கள் ஏன் பணம் தர வேண்டும் என்று பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலாளருக்கு அரிவாள் வெட்டு
இதனை கண்ட அலுவலக மேலாளர் ரகுராமன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டிருந்த வாலிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 4 வாலிபர்களும் சேர்ந்து ரகுராமனை சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவர் திடீரென அரிவாளால் ரகுராமனை வெட்டி உள்ளார்.
தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த ரகுராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் தகராறில் ஈடுபட்டவர்கள் திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.