தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இன்று (திங்கட்கிழமை) என தொடர் விடுமுறை காரணமாக நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மார்கழி மாத பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். கோயிலில் ராஜகோபுரம் வழியாக கட்டணம் மற்றும் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கட்டண தரிசனத்திற்காக சென்ற பக்தர்களின் வரிசை ராஜகோபுரத்தில் இருந்து வடஒத்தவாடை தெருவில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் வரையும், பொது தரிசனத்திற்காக சென்ற பக்தர்களின் வரிசை தென் ஒத்தவாடை தெருவில் உள்ள திருமஞ்சன கோபுரம் வரையும் நீண்டு காணப்பட்டது. இதனால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
வி.ஐ.பி.க்கள் மட்டும் அனுமதி
அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் இரும்பு கதவு மூடப்பட்டு வி.ஐ.பி.க்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர். இருப்பினும் ஏராளமான பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலில் மூடிய கேட்டின் முன்பு காத்திருந்து வி.ஐ.பி.க்களை உள்ளே அனுப்பும் போது சண்டை போட்டு உள்ளே சென்றனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் போது போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.